மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. அண்மையில் அனுப்பிய அறிக்கை ஒன்றில், சிறார் ஆபாசப் படங்கள் பார்ப்பவர்களின் பட்டியலில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, மத்திய உள் துறை அமைச்சகம் தமிழ்நாடு காவல் துறைக்கு அறிவிக்கை அனுப்பியது.
அதன்பேரில், தமிழ்நாட்டில் சிறார் ஆபாசப் படங்கள் பார்ப்பவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுவருவதாகவும், மத்திய உள் துறை அளித்த பட்டியலின் அடிப்படையில் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் இயக்குநர் ரவி தெரிவித்துள்ளார்.
சிறுவர், சிறுமியரை ஆபாசமாகப் பார்க்கும் மனநிலையில் இருப்பவர்கள் குழந்தைகளுக்கு ஆபத்தானவர்கள் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டில் 3000 பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல், குழந்தைகள் மற்றும் சிறார் ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவேற்றும் மற்றும் பதிவிறக்கம் செய்யும் கும்பலில் முதல் 60 ஐ.பி முகவரி திருச்சியை சேர்ந்தது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.