ராணிப்பேட்டையை அடுத்த செட்டிதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி. கட்டடத் தொழிலாளரான இவருக்கு தனுசு, கோபிகா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று பகல் நேரத்தில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கோபிகா வெகுநேரம் ஆகியும் காணாததால் பெற்றோர் பதறினர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை குழந்தையின் பெற்றோர் ஆய்வு செய்தனர். அதில் சுமார் 1.30 மணியளவில் சிறுமியை ஒரு பெண் தூக்கிச் செல்வதும், பின்பு சில நிமிடங்கள் கழித்து அப்பெண் மட்டும் திரும்பி வருவதும் பதிவாகியிருந்தது.
இது குறித்து ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரிக்க தொடங்கினர். விசாரணையில் திடுக்கிடும் திருப்பமாக, கோபிகாவை தூக்கிச் சென்றது காந்தியின் அண்ணன் மனைவியான ராணி(36) என்பது தெரியவந்தது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், ஒன்றும் தெரியாதது போல் நடித்த ராணியிடம், சிசிடிவி காட்சிகளை காட்டி தொடர்ந்து விசாரித்ததில், சொத்து தகராறு காரணமாக, தான் தான் குழந்தையை தூக்கிச் சென்று கிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டார்.