சென்னை விருகம்பாக்கம் லோகநாதன் தெருவை சேர்ந்தவர் நிஜாமுதீன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நஸ்ரின் சுல்தானா. இவர்களின் மகன் முகமது உவைஸ் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்தார்.
இந்நிலையில், நஸ்ரின் சுல்தானா பள்ளி முடிந்தபின் தன் மகனை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியே வந்த தண்ணீர் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில் மூவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
அப்போது, லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சிறுவன் உவைஸ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் நஸ்ரின் சுல்தானா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் லாரி ஓட்டுநரை கைது செய்து, சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி மோதி தாயின் கண் முன்னே உயிரிழந்த 4 வயது சிறுவன்! தாய் கண் முன்னே மகன் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.