வேடசந்தூரைச் சேர்ந்த தொழிலாளியின் 6 வயது பெண் குழந்தை அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தார். ஞாயிறு விடுமுறை என்பதால் மதியம் வீட்டில் விளையாட செல்வதாகக் கூறிவிட்டு வெளியே சென்ற குழந்தை நள்ளிரவாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அக்குழந்தையின் பெற்றோர் தேடியலைந்தபோது ஊருக்கு வெளியே இருந்த தனியார் தோட்டத்தில் உடலில் காயங்களுடன் சிறுமி இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த கூம்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, பெண் குழந்தையின் உடலைக் கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து தங்களது விசாரணையைத் தொடங்கினர். இந்நிலையில், சிறுமியின் உடலை முதற்கட்ட பரிசோதனைக்குப் பின் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திண்டுக்கல் மகிளா நீதிபதியிடம் கோரிக்கை மனு அளித்தபோது... காவல்துறை தரப்பில் குழந்தை டிராக்டரில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டதால், குழந்தையின் உறவினர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்த சிறுமியின் உறவினர்கள், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என குற்றம்சாட்டி கொலையாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக ஐயத்திற்கிடமான இரண்டு சிறுவர்களை காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். கூடுதலாக தோட்டத்தின் உரிமையாளர் உமாசங்கர் மீதும் டிராக்டர் வழங்கியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவரும் உமாசங்கரின் தோட்டத்தில் வேலை செய்யக்கூடிய நபர்களின் மகன்கள். ஆதலால், குற்றத்தை மறைப்பதற்காக உமாசங்கர் மீதும் டிராக்டர் வழங்கியதாகவும் சிறுவர்கள் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, உண்மையான குற்றவாளியை கைது செய்யக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக திண்டுக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, ‘இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 15 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். சாதி மற்றும் அதிகார ஆதிக்கத்தின் காரணமாக இதுபோன்ற வழக்குகளில் ஆளுங்கட்சியினர் குற்றவாளிகளை பாதுகாக்கிறார்கள். இந்த வழக்கில் சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் குறைந்த காலம் இருந்துவிட்டு வெளியில் வருவதற்கு அதிகமான வாய்ப்புள்ளன. இது மிகவும் தவறான ஒரு முன்னுதாரணமாக மாறிவிடும்.
எனவே, உண்மையான குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட வேண்டும். மாறாக காவல் துறையினர் தங்கள் முதுகுக்குப் பின்னால் நிறுத்தி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடாது. எங்களது புகாரை பெற்றுக்கொண்ட திண்டுக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார். மேலும், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் உள்ளிட்டோரிடம் புகார் அளிக்க உள்ளோம். மேலும், மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலும் மனு தாக்கல் செய்து சட்டப் போராட்டம் நடத்துவோம்’ என தெரிவித்தார்.
சிறுமி படுகொலை : உண்மை குற்றவாளிகளை பாதுகாக்கிறதா காவல்துறை? - மாதர் சங்கம்
6 வயது பெண் குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : தேசியத் தலைவர்களுடன் இருக்கும் புகைப்படத்தைக் காட்டி பெண் நூதன முறையில் மோசடி!