கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிந்துவருபவர் மாரிமுத்து. இவர் நேற்று காலை 9 மணியளவில் சொந்த வேலை காரணமாக குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுவிட்டு இரவு 12 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலையடுத்து விரைந்துவந்த காவல் துறையினர் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது தனியறையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பீரோக்கள் உடைந்து காணப்பட்டன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 197 சவரன் நகை, 6 லட்சம் ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட மருத்துவர் வீடு இதனைத் தொடர்ந்து, காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் தலைமையில் கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தலைமை அரசு மருத்துவர் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
197 சவரன் நகை, 6 லட்சம் பணம் கொள்ளை வீட்டில் ஆள் இல்லாத நேரத்தை நோட்டமிட்டு திட்டம் தீட்டப்பட்டு இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தலைமை மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், ஊத்தங்கரை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பாம்பனில் ஒரு வீட்டின் கதவை உடைத்து சுமார் 150 பவுன் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.