சென்னை யானைக்கவுனியில் கடந்த 11ஆம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை தலில் சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் குமார் ஆகியோர் கொடூரமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக யானைக்கவுனி காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ஷீத்தலின் மனைவி ஜெயமாலா தனது சகோதரர்களுடன் சேர்ந்து துப்பாக்கியால் மூவரையும் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, புனேவிற்கு தப்பிச்சென்ற ஜெயமாலா, அவரது சகோதரர்கள் கைலாஷ், விலாஸ் உள்ளிட்ட ஆறு பேரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஜெயமாலாவின் சகோதரர்களுக்கு கார் மற்றும் துப்பாக்கி கொடுத்து உதவிய மகாராஷ்டிராவில் ஓய்வு பெற்ற ராணுவ அலுவலர் ராஜீவ் துபே என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரது மனைவி மது துபேவும் விமானப்படையில் பணிபுரிந்தது தெரியவந்துள்ளது.
சென்னை அழைத்து வரப்பட்ட ராஜீவ் துபேவிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராஜீவ் துபே, அவரது மனைவி ஜெயமாலாவின் குடும்ப நண்பர்களாவர். இவர் நடத்தும் ஹோட்டலில் அடிக்கடி வந்ததன் காரணமாக, அவர் வைத்திருந்த காரை கைலாஷிடம் ரூ. 2.5 லட்சத்திற்கு விற்றுள்ளார். அதற்கான முழு தொகையையும் கொடுக்கப்படவில்லை. தனது துப்பாக்கியை வாகனத்திலேயே மறந்து வைத்து விட்டதாகவும், திருப்பி கேட்டதற்கு கைலாஸ் தராமல் ஏமாற்றியதாக ராஜீவ் துபே வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக காவல் துறையிடம் புகார் அளிக்காதது ஏன் என கேள்வி கேட்டதற்கு, துபே முறையாக பதிலளிக்கவில்லை. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், ஒரு துப்பாக்கி கள்ளத்துப்பாக்கி என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து கள்ளத்துப்பாக்கி குறித்து கைது செய்யப்பட்ட விலாஸிடம் விசாரணை செய்தபோது, புனே அகமது நகர் காட்டுப்பகுதியில் வீசி சென்றதாக தெரிவித்தார்.