மத்திய உள் துறை அளித்த பட்டியலின் அடிப்படையில் சிறார் ஆபாசப் படங்களை பார்ப்பவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு காவல் துறை அதிரடியாக அறிவித்தது. சிறுவர், சிறுமியரை ஆபாசமாகப் பார்க்கும் மனநிலையில் இருப்பவர்கள் குழந்தைகளுக்கு ஆபத்தானவர்கள் என்ற அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சிறார் ஆபாசப்படம் பதிவேற்றம் செய்பவர்கள், பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்கள், பகிர்பவர்கள் ஆகியோர்கள் தொடர்பாக சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐபி முகவரிகள் (IP Address) கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இந்த விசாரணையில் கடந்த மாதம் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக சிறார் ஆபாசப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததற்காக திருச்சி பாலக்கரை காவல் துறையினரால் கிறிஸ்டோபர் அல்ஃபோன்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் ரவி கூறுகையில், சென்னையில் சிறார் ஆபாசப்படம் பார்த்தல், பகிர்தல் தொடர்பாக 30 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கைது நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவித்திருந்தார்.
சிறார் ஆபாசப்படம் பகிர்வோர் - இரண்டாவது பட்டியலும் தயார் இந்நிலையில், தற்போது சென்னையில் சிறார் ஆபாசப்படம் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்து பார்த்த, பகிர்ந்தவர்கள் மேலும் 40 பேரின் பட்டியல் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை நடைபெறவுள்ளதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றத்தடுப்பு பிரிவு அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சிறார் ஆபாசப்படம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த வழக்குகளில் கைது நடவடிக்கைகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று கோவை மாவட்ட காவல் துறையினருக்கு 30 பேர் கொண்ட பட்டியலும் வடக்கு மண்டல காவல் துறை தலைவருக்கு 2 பேர் கொண்ட பட்டியலும் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குழந்தைகள் ஆபாச பட விவகாரத்தில் முதல் கைது!