சென்னை:புறநகர் பகுதியைச் சேர்ந்த சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அரசு உயர் அலுவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்படும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுமான பிரிவு தலைமை செயற்பொறியாளர் கண்ணன் (53) என்பவரைக் காவல் துறையினர் நேற்று (ஜனவரி., 7) கைது செய்தனர். உயர் அலுவலரான கண்ணன், மதுரையைச் சேர்ந்தவர். அவர், சென்னை சைதாப்பேட்டையில் தனியார் விடுதியில் தங்கி, கீழ்ப்பாக்கத்தில் பணிபுரிந்தார்.
அவர், கார்த்திக் என்பவரின் உதவியுடன் மகேஸ்வரி என்ற பெண் இடைத்தரகர் மூலமாக, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது. சிறுமியும் அடையாள அணிவகுப்பில் அவரை அடையாளம் காண்பித்ததையடுத்து, மகளிர் நீதிமன்றத்தின் முன்னிறுத்தி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அரசு உயர் அலுவலரான கண்ணனுடன் சேர்ந்து வேறு எவரும் பாதிப்புக்குள்ளான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனரா என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதால், கண்ணனைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதுவரை கண்ணனோடு சேர்த்து 22 நபர்கள் இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சென்னை புறநகர் பகுதியைச் சேர்ந்த, 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், வண்ணாரப்பேட்டையில் வசித்துவந்த அவரது உறவினர் ஷகிதா பானு (23) அவரது கணவர் மதன்குமார் (35) உள்ளிட்ட எட்டு பேரை, ‘போக்சோ’ சட்டத்தின் கீழ், வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.
அதன்பின் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எண்ணூர் சட்டம் – ஒழுங்கு ஆய்வாளர் புகழேந்தி, அவரது நண்பர் பாஜக பிரமுகர் ராஜேந்திரன், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.