சென்னை பூக்கடை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் 12 வயது மகள் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள காப்பகத்தில் தங்கி படித்துவந்துள்ளார்.
அப்போது காப்பகத்தை நடத்திவந்த கல்யாணசுந்தரம் (56) என்பவர் காப்பகத்தில் தங்கி படித்துவந்த நான்கு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் எம்கேபி நகர் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில், சம்பவயிடத்திற்குச் சென்ற காவல் துறையினர் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகளை மீட்டு சேத்துபட்டில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். மேலும், காப்பகத்தை பூட்டி சீல்வைத்த காவல் துறையினர் தப்பி ஓடிய காப்பக உரிமையாளர் கல்யாணசுந்தரத்தை தேடிவருகின்றனர்.
இது தொடர்பாக காவல் துறை விசாரணையில் கடந்த 2014ஆம் ஆண்டு பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் வேப்பேரி காவல் துறையினர் காப்பக உரிமையாளர் கல்யாணசுந்தரத்தை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், இவ்வழக்கு தொடர்பான விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று 2015ஆம் ஆண்டு நீதிமன்றம் காப்பக உரிமையாளர் கல்யாணசுந்தரத்திற்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது தெரியவந்துள்ளது.
பின்னர் தண்டனை பெற்ற கல்யாணசுந்தரம் பிணையில் வெளியே வந்ததுடன் மீண்டும் காப்பகம் நடத்திவந்துள்ளார். மேலும் தற்போது பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் சமூக நலத்துறை அலுவலர்கள் நேரில் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க...கிருஷ்ணகிரியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!