தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

ரூ. 1,727 கோடி மோசடி - தனியார் மின் உற்பத்தி நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு

சென்னை: தனியார் எரிசக்தி நிறுவனம் 1,727 கோடி ரூபாய் வங்கி மோசடி செய்த விவகாரத்தில் அந்நிறுவன இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

case
case

By

Published : Sep 10, 2020, 5:55 PM IST

சென்னையைச் சேர்ந்த சுரானா இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் 2,400 கோடி ரூபாய் செலவில், கர்நாடகாவில் இரண்டு 210 மெகாவாட் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்காக, ஐடிபிஐ வங்கி கூட்டமைப்பு மூலம் 10 வங்கிகளில், சுமார் ஆயிரத்து 495 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளது.

ஆனால், அந்நிறுவனம் கடன் பெற்ற பணத்தை முறைகேடான முறையில் பயன்படுத்தியதாகவும், போலி ஆண்டு வருமானக் கணக்கு கொடுத்து மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வங்கி விசாரணை மேற்கொண்டது. இதில், சுரானா நிறுவனம் மோசடி செய்தது உறுதியானது. குறிப்பாக 2008 முதல் 2017ஆம் ஆண்டு வரை மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடன் அளிக்கப்பட்ட 1,495 கோடி ரூபாய்க்கு வட்டியோடு சேர்த்து 1,727 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, பெங்களூருவில் உள்ள சிபிஐ வங்கி மோசடி பிரிவில், ஐடிபிஐ வங்கியின் பொது மேலாளர் பூமா லட்சுமி புகாரளித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடு முழுவதும் வங்கி மோசடி செய்த நிறுவனங்கள் மீது சிபிஐ அதிரடியாக வழக்குப்பதிவு செய்து சோதனை மேற்கொண்டது. சுமார் 7,200 கோடி ரூபாய் அளவிற்கு வங்கி மோசடி விவகாரத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. அந்த சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வங்கி மோசடி செய்த விவகாரத்தில் சுரானா நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை செய்து முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தது.

இதனையடுத்து, சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தை அடிப்படையாக வைத்தும், ஐடிபிஐ வங்கி கொடுத்த புகாரின் அடிப்படையிலும், சுரானா நிறுவன இயக்குநர்கள் கௌதம் ராஜ் சுரானா, சாந்திலால் சுரானா, விஜயராஜ் சுரானா, தினேஷ் சந்த் சுரானா ஆகிய நான்கு பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. நாட்டிலேயே வங்கி மோசடியில் சிபிஐ வழக்குப்பதிவு செய்ததில்,1000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நிறுவனத்தில், சென்னையைச் சேர்ந்த சுரான பவர் லிமிடெட் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ஒரு கோடி மோசடி!

ABOUT THE AUTHOR

...view details