நீட் தேர்வு முறைகேட்டை விசாரித்து வரும் சிபிசிஐடி, போலியாக நடித்து தேர்வு எழுதியவர்களை அடையாளம் காணும் பொருட்டு, ஆதார் ஆணையத்தின் (UIDAI) உதவியை நாடியுள்ளது. மேலும், இது தொடர்பாக ஆதார் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ள சிபிசிஐடி, முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏறத்தாழ 12 பேரின் புகைப்படங்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளை ஆதார் ஆணையத்துக்குப் பகிர்ந்துள்ளது.
நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் மூலம், போலியாக நியமிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது கிரிமினல் சதி, ஆள்மாறாட்டம், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சிபிசிஐடி காவல்துறையால் பதியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர், வட இந்தியாவில் உள்ள தேர்வு மையத்தில் தனக்குப் பதில் போலியாக ஒருவரை நியமித்து தேர்வு எழுத வைத்து முறைகேடு செய்தது முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இந்த விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டதையடுத்து, அதே பாணியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் வெளிவந்தது. மேலும், இது தொடர்பாக 7 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் உட்பட 15 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் பிற மாநிலத் தேர்வு மையங்களில், இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.