தமிழ்நாடு

tamil nadu

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு - தேர்ச்சி பெற பணம் கொடுத்த நால்வர் கைது

By

Published : Feb 4, 2020, 8:39 PM IST

சென்னை: குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக ராமேஸ்வரத்தில் காவலர் சித்தாண்டி இன்று கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் நான்கு பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

arrest
arrest

2017ஆம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்திருப்பதாகக் கூறி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிபிசிஐடி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இவ்வழக்கில் இதுவரை குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டிற்காக ஒன்பது நபர்களும், குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 16 நபர்களும் என, மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கியக் குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்த, காவலர் சித்தாண்டியை ராமேஸ்வரத்தில் இன்று காவல் துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணையில் குரூப் 2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றது தெரிய வந்ததன் அடிப்படையில், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தீபக், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், அருண் பாலாஜி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த தேவி ஆகிய நான்கு பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் தீபக் எட்டு லட்சம் ரூபாயையும், வினோத் குமார் ஒன்பது லட்சம் ரூபாயையும், இவ்வழக்கில் தலைமறைவாகவுள்ள இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளனர். அதேபோல் மற்ற இருவரும் தலா 13 லட்சம் ரூபாய் கொடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், இதில் யாரையெல்லாம் அவர்கள் தொடர்பு கொண்டார்கள் என்பது குறித்தும், அந்தப் பணம் யாருக்கெல்லாம் பிரித்துக் கொடுக்கப்பட்டது என்பது குறித்தும், கைது செய்யப்பட்ட நால்வரிடமும் சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடு: சிபிசிஐடியிடம் சிக்கிய சித்தாண்டி

ABOUT THE AUTHOR

...view details