கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை அடையாறு காவல் நிலையத்தில் லண்டன் வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மருத்துவ ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தன்னை திருமணம் செய்துகொள்வதாக மோசடி செய்து பாலியல் ரீதியாக கொடுமை செய்த தனியார் நிறுவன தலைமை அலுவலர் ராஜ்குமார் அய்யாசாமி என்பவர் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இதுதொடர்பாக வழக்கறிஞர் பாட்ஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், லண்டனில் ராஜ்குமார் அய்யாசாமி தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். அப்போது, அய்யாசாமி முதல் திருமணம் செய்து விவகாரத்து பெற்றதாகக் கூறி, திருமணத்திற்கு முன்பு இவரிடம் வாட்ஸ்அப்பில் பாலியல் ரீதியாக பேசி வீடியோக்களை அனுப்பியுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்பு அய்யாசாமி இவரை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியுள்ளார். சென்னை வந்த பின்பு அவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர். அவரை விட்டு விலக முயன்ற பெண்ணிடம், அய்யாசாமி போதை மருந்து கொடுத்து, ஆடை இல்லாமல் எடுத்த வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.