தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி அருகே அண்ணனை இரும்பு கம்பியால் தம்பி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே புதுச்சத்திரம் குடியான தெருவைச் சேர்ந்த கலியமூர்த்தியின் மகன்கள் சந்திரசேகர் (40), ராஜகோபால் (37). நேற்றிரவு (செப்டம்பர் 2) ராஜகோபால் அதிகப்படியாக கடன் வைத்திருப்பதாகக் கூறி, அதுகுறித்து சந்திரசேகரிடம் கேட்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பானது.
சற்றும் எதிர்பாராத விதமாக இரும்பு கம்பியால் சந்திரசேகரை, தம்பி ராஜகோபால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சந்திரசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து சந்திரசேகரின் அக்கா செல்வி திருக்காட்டுப்பள்ளி காவல் துறையினரிடம் புகாரளித்தார்.
உடனடியாக வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதேவி, ராஜகோபாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துணை கண்காணிப்பாளர் சித்திரவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.