சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டம், நாகலூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கொளகூர் கிராமத்தைச் சேர்ந்த அலவராக்கவுண்டர் - கரியம்மாள். இவரது மகன் சின்ராஜ். இவர், பாஜகவின் ஏற்காடு ஒன்றிய துணைத் தலைவராக பதவி வகித்து வந்துள்ளார்.
கரியம்மாளின் நிலத்தை அவரது மருமகனான ராமகிருஷ்ணன் என்பவர் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால், தங்கள் நிலத்தை ராமகிருஷ்ணனிடம் இருந்து மீட்டு தரும்படி கரியம்மாளின் மகன்கள் ஊர் பெரியவர்களிடம் கூறினர்.
ஆகையால், கொளகூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயில் திடலில் ஊர் பஞ்சாயத்து கூடி, கரியம்மாளுக்குச் சொந்தமான நிலத்தை அவர்களது வாரிசுகளிடம் ஒப்படைக்கும்படி ராமகிருஷ்ணணிடம் கூறியுள்ளனர். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார்.
பின்னர், நண்பகலில் கொளகூரில் உள்ள டீக்கடை ஒன்றில் அமர்ந்திருந்த சின்ராஜை, ராமகிருஷ்ணனின் மகன் மணிகண்டன் அரிவாளால் வெட்டினார். இதில் சின்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடம் சென்ற ஏற்காடு போலீசார், வழக்குப் பதிவு செய்து கொலையாளியைத் தேடி வருகின்றனர்.