திருவொற்றியூரில் வழக்குரைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம், செங்கல்பட்டு நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குரைஞராக பணிபுரிந்து வந்தவர் ராஜேஷ்குமார் (வயது 35). இவருக்கு திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தனது மனைவி, இரண்டு ஆண் குழந்தைகளுடன் காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகரில் வசித்து வந்துள்ளார்.
இச்சூழலில் நேற்று (செப். 2) திருவொற்றியூரிலுள்ள தனது தந்தையை பார்ப்பதற்காகச் சென்ற இவர், தொடர்ந்து, தனது கால்களில் வலி இருப்பதாகக் கூறி அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்று தந்தையின் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். பின்னர், வீட்டின் அறைக்குச் சென்று கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து வெகு நேரமாகியும் ராஜேஷ் குமார் வெளியே வராததால், ஜன்னல் வழியாக அவரது தந்தை பார்த்தபோது, மின்விசிறியில் ராஜேஷ்குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இதனையடுத்து, ராஜேஷ்குமாரின் தந்தை, பெருமாள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுகாக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக ராஜேஷ் குமார் தனது கைப்பட எழுதிய கடிதத்தை காவல் துறையினர் கைப்பற்றினர்.
அதில், தனது நண்பர்களான செங்கல்பட்டைச் சேர்ந்த செல்வதுரை, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் ஆகிய இருவரும் அவர்கள் வசிக்கும் சுற்றுப்புறப் பகுதிகளில், பல நபர்களிடமிருந்து தனது பெயரை உபயோகித்து அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் பெற்றதாகவும், ஆனால் வேலைக்கு பணம் கொடுத்தவர்கள், தன்னிடம் தான் பணம் உள்ளது என்றெண்ணி தினமும் தனது வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செல்வதுரை, ஞானப்பிரகாசம் இருவரும் சில நாள்களுக்கு முன்பு ரவுடிகளையும், சில வழக்குரைஞர்களையும் அழைத்து வந்து தன்னை மிரட்டி சில காகிதங்களில் கையெழுத்துப் பெற்றுக் கொண்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ராஜேஷ் குமார், தன் இரு நண்பர்களையும் அழைத்து, இது குறித்து வினவியுள்ளார்.
இதில் விவாதம் முற்றியதில், ராஜேஷையும் அவரது குடும்பத்தையும் அழிக்காமல் விடமாட்டோம் என்று அவரது நண்பர்கள் இருவரும் மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த ராஜேஷ்குமார், தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்போது காவல் துறையினர் இக்கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.