தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாகல்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டிச்சி. இவர் தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றார்.
அதில், தங்களது கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்பவர், அவரது இருசக்கர வாகனத்தை எரித்துவிட்டதாகக் கூறி தனது மகன் தேவராஜ் மீது புகார் கொடுத்தார். ஆனால், தனது மகன் தேவராஜ் பெங்களூருவில் கட்டட வேலை செய்துவந்தார். அதற்கு சாட்சியாக கட்டட உரிமையாளர், தொழிலாளிகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இதேபோன்று, அஜித் என்பவரின் செல்போன் திருடு போனதாகவும் அதையும் தனது மகன் தேவராஜ் எடுத்துவிட்டதாக தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணையின் போது, பசுபதி என்பவர் செல்போனை திருடி அடகு வைத்தது தெரியவந்தது என்றார். மேலும், தங்களது குடும்பத்தினர் மீது பொய் புகார்களை அஜித் கொடுத்து வருவதாகவும், இதனால் தொப்பூர் போலீசார் தங்கள் குடும்பத்தை துன்புறுத்தி வருவதாகவும் அந்த மனுவில் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஆட்சியர் அலுவலகத்தில் ஆண்டிச்சியின் குடும்பத்தினர் 11 பேர், மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு விசாரணைக்காக தருமபுரி நகர காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் 18 ரேசன் அரிசி மூட்டைகள் கடத்த முயற்சி - ஒருவர் கைது