அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள இளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி(19). இவர் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பத்தில் பட்டயப்படிப்பை படித்துள்ளார். இதையடுத்து, இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் வசித்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாத நோயாளிகளுக்கு வீட்டிற்குச் சென்று மருத்துவப் பணிவிடை செய்து வந்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக சிதம்பரத்தைச் சேர்ந்த தமிழரசன் என்ற இளைஞர், விஜயலட்சுமியைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விஜயலட்சுமி பணிநிமித்தமாக சென்னைக்கு வந்ததால் தமிழரசனும் சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கு வந்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழரசன் அடிக்கடி பொய்க் கூறி ஏமாற்றி வருவதை விஜயலட்சுமி அறிந்து கொண்டார்.
இதையடுத்து, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழரசன், விஜயலட்சுமி இருவருடைய காதல் முறிவு வரை சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து விரக்தியடைந்த விஜயலட்சுமி அவர் தங்கியிருந்த விடுதியின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.