திருச்சி மாவட்டம், திருவெறும்பூரைச் சேர்ந்தவர்கள் கோவிந்தன் - அஸ்வினி தம்பதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தையை வளர்த்து வந்தனர். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு, காவல்துறையினருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ஒருவர், கோவிந்தன் - அஸ்வினி தம்பதி சட்டவிரோதமாக குழந்தையை வளர்ப்பதாகப் புகார் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் அஜிம் தலைமையிலான குழந்தைகள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், அஸ்வினி வீட்டுக்குச் சென்று விசாரித்ததில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார். பின்னர், பிப்ரவரி 3ஆம் தேதி திருவெறும்பூர் காவலர்களுடன் சென்ற குழந்தைகள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், அஸ்வினியைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்றிவந்த வெண்ணிலா (42), அவருக்கு உதவிய லூர்து மேரி (55) ஆகியோரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் குழந்தையை ரூ.82 ஆயிரத்துக்கு விற்பனை செய்த புவனேஸ்வரி (42) என்பவரையும் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியைச் சேர்ந்த தர்மராஜ் (30) என்பவர் காவலாளியாகவும், அவரது மனைவி ராணி (27) கட்டடத் தொழிலாளியாகவும் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், ராணி மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால், கேட்பவர்களிடம் வயிற்றில் கட்டி உள்ளது என்று மறைத்துள்ளார்.
இதனிடையே, ஜனவரி மாதம் 13ஆம் தேதி வீட்டிலேயே ராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மறுநாள், சக கட்டடத் தொழிலாளர்கள் ராணியை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அப்போது ராணி தனது பெயர் சிவகாமி என்றும், கணவர் பெயர் பாலசுப்பிரமணியன் என்றும் தான் துறையூரைச் சேர்ந்தவர் என்றும் தவறான முகவரியைக் கொடுத்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன்பாகவே, ராணி மருத்துவமனையை விட்டு வெளியேறி உள்ளார்.
இதனால் திருச்சி மருத்துவமனை அலுவலர்கள், துறையூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு ராணியின் முகவரியை விசாரணை செய்யுமாறு கூறினர். அதில் அந்த முகவரி போலி எனத் தெரியவந்தது. இந்நிலையில், சுகாதார செவிலி ஜெயசுந்தரி, ராணி வீட்டுக்குச் சென்றபோது, அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. மேலும் ராணியிடம் குழந்தை எங்கே? என்று ஜெயசுந்தரி கேட்டதற்கு, அக்கா வீட்டில் இருப்பதாகக் கூறினார். பின்னர் ராணியை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு ஒரு வாரம் சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது, திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையுடன் சிவகாமி என்ற பெயரில் வெளியேறியது ராணி தான் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, திருச்சி மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளருக்கு தகவல் கொடுத்த ஜெயசுந்தரி, அவர்களுடன் ராணி வீட்டுக்குச் சென்று விசாரணை செய்தார். அப்போது 13 ஆண்டுகளாக குழந்தை இல்லாத, தனது உறவினரான துறையூரைச் சேர்ந்த குமார், சாரதா தம்பதியிடம் கொடுத்ததாகக் கூறினார். அதன் அடிப்படையில் ராணி, தர்மராஜை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதன்பின், இந்த இரண்டு வழக்குகளிலும் தொடர்புடைய 8 பேரை திருச்சி 6ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பச்சிளம் குழந்தையைக் கொன்றுவிட்டு தாய் - தந்தை நாடகம்: அதிர்ச்சியளிக்கும் பின்னணி தகவல்