அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் சட்டத்தின்படி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்றத்தின் நீதிபதி கலையரசன் விசாரணை அலுவலராக நியமனம் செய்து உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா கடந்த 11ஆம் தேதி அரசாணை வெளியிட்டார். இந்த அரசாணையில் நிதி முறைகேடுகள், பதவி உயர்வு முறைகேடுகள் உள்ளிட்டவை குறித்து வந்த புகார்களையும் தெளிவாக கூறி இருந்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசனிடம் உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா நேற்று(நவ.16) ஆவணங்களை ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை அலுவலராக ஓய்வு பெற்ற நீதிபதி பொன். கலையரசன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசாரணை அலுவலர் கலையரசன், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றதாக கூறப்படும் புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக அப்பல்கலைக்கழகத்தின் சட்டத்தின்படி விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தால் அதுகுறித்து விசாரிக்கப்படும்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக சூரப்பா பதவியேற்ற முதல் நாளில் இருந்து தற்போது வரை நடைபெற்ற பணி நியமனங்கள் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் விசாரணை செய்யப்படும். தேவைப்பட்டால் சூரப்பா பதவி ஏற்பதற்கு முன்பு நடைபெற்ற நிர்வாக செயல்பாடுகள் குறித்தும் விசாரிக்கப்படும்.