மதுரை:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் ஆள் மாறாட்டம் செய்த விவகாரத்தில் வருவாய் துறையினர் விசாரித்ததில், முதல் பரிசு பெற்றவர் பனியனை மாற்றியது தெரிய வந்துள்ளது.
ஜனவரி 16ஆம் தேதி நடைபெற்ற உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை பிடித்து முதல் பரிசு பெற்ற விராட்டிபத்துவைச் சேர்ந்த கண்ணன், முன்பதிவு செய்யாமல் ஹரிகிருஷ்ணணின் 33ஆவது எண் கொண்ட பனியனை மாற்றி அணிந்து ஆள்மாறாட்டம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அதனைத் தொடர்ந்து மதுரை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவிட்டார். வருவாய் துறை அலுவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கண்ணன் பனியனை மாற்றி களத்தில் விளையாடியுள்ளது உறுதிசெய்யப்பட்டது.