தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

ஆக்ரா தம்பதி உள்ளிட்ட மூவர் கொடூரக் கொலை: சேலம் அருகே அரங்கேறிய வெறிச்செயல்

சேலம்: ஆக்ராவிலிருந்து சேலத்திற்கு வேலைக்கு வந்த கணவன் மனைவி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளது தொடர்பாகக் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

investigation
investigation

By

Published : Mar 9, 2020, 8:31 AM IST

சேலம் மாவட்டம் திருமலைகிரி அடுத்துள்ள செம்மண்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்குச் சொந்தமான வெள்ளி பட்டறையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஆக்ராவைச் சேர்ந்த ஆகாஷ் (26), அவரது மனைவி வந்தனா (21), ஆகாஷின் அண்ணன் மகன் சன்னி (18) ஆகியோர் வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் தங்கராஜ் வீட்டின் அருகில் உள்ள, அவருக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் தங்கி வேலைசெய்து வந்துள்ளனர். ஆகாஷ் - வந்தனா தம்பதிக்கு 10 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இரவு 9 மணியளவில் ஆகாஷின் வீடு வெளிபக்கம் தாழிடப்பட்டிருந்த நிலையில், வீட்டின் வெளிப்புறம் தொட்டிலிலிருந்த அவர்களது குழந்தை அழும் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்த பெண் வந்து பார்த்துள்ளார்.

அப்போது, வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டுக்குள் வந்தனா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். மேலும் வீட்டிற்கு பின்புறம் குடிநீர் குழாய் அருகில் ஆகாஷ், சன்னி ஆகியோரும் கொலைசெய்யப்பட்டு கிடந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல் ஆணையர் செந்தில், துணை ஆணையர் தங்கதுரை ஆகியோர் நேரடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுமேற்கொண்டனர்.

சம்பவ இடத்தின் காட்சி

இது குறித்து இரும்பாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடந்த சனிக்கிழமை அன்று ஆக்ராவிலிருந்து வந்த வினோத், தினேஷ், சுராஜ், விஜி ஆகிய நான்கு பேர் தங்கராஜின் வெள்ளிப் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.

இவர்கள் நால்வரும் ஆகாஷ் தங்கியிருந்த வீட்டின் எதிரே இருந்த வீட்டில் தங்கியுள்ளனர். ஞாயிறு விடுமுறை என்பதால் ஆகாஷ், வினோத் நண்பர்கள் அனைவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் வினோத், அவரது நண்பர்கள் சேர்ந்து இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

நான்கு பேரும் தலைமறைவாக உள்ளதால் அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் ஆக்ராவுக்குத் தப்பி சென்றிருக்கலாம் என்பதால் அவர்களைத் தேடி தனிப்படை காவல் துறையினர் ஆக்ரா விரைந்துள்ளனர்.

இதையும் படிங்க: தேனியில் அடுத்த பரபரப்பு: பரமசிவன் கோயில் அருகே கிடந்த முதியவரின் தலை!

ABOUT THE AUTHOR

...view details