காஞ்சிபுரம்:இரண்டு ரவுடிகளை கொலை செய்ய திட்டம் தீட்டிவந்த ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கிலாய் பகுதியில் விஷ்வா(30) பாலசந்தர்(21) சந்துரு(22) மகேஷ்(21), சிவக்குமார்(35) ஆகிய ரவுடி கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருப்பதாக ஆய்வாளர் கிருஷ்ணகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் காவலர்களுடன் விரைந்து சென்ற ஆய்வாளர் கிருஷ்ணகுமார், கிளாய் பகுதியில் உள்ள குடியிருப்பில் மறைந்திருந்த, 5 ரவுடிகளை கைது செய்தார். பிடிபட்டவர்களிடமிருந்து 14 கத்தி, ஆறு நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினார்.
இது குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இவர்கள் பிரபல ரவுடிகளான ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த வைரம், போந்தூர் மோகன் ஆகியோரை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டியதாக தெரிவித்துள்ளனர். மேலும், இவர்கள் 5 பேரும் பல்வேறு கொலை, குற்றச் சம்பவங்களில் தேடப்பட்டு வந்தவர்கள் எனத் தெரியவந்தது.
மேலும், இவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ரவுடி விஸ்வாவின் காதலியான மகாலட்சுமியையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மகாலட்சுமி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.