தரமணி, எம்.ஜி.சாலையில் வாழ்ந்துவரும் கரீம் (52) என்பவர், கடந்த 3ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகத்தை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். காலை எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கரீம், தரமணி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதேபோல் அப்பகுதியில் அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் திருட்டுபோவது தொடர்கதையாகி வந்த நிலையில், காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
இதையடுத்து, அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கண்காணித்த தனிப்படையினர், இருசக்கர வாகனத்தை திருடிய ரீகன் (20) என்பவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அப்பகுதியில் நான்கு இருசக்கர வாகனங்களை திருடியதும், அவருக்கு உதவியாக நண்பர்கள் அசார் மொய்தீன் (23), வினோத் (19), ரமேஷ் (23), வெங்கடேஷ் (23), இன்பத்தமிழன் (21) ஆகியோர் செயல்பட்டதும் தெரியவந்தது.