தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே கூட்டுறவு பண்டகசாலை செயல்பட்டுவருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் வழக்கம்போல் இன்று காலை விற்பனையகத்தை திறப்பதற்காக வந்தனர். அப்போது பண்டகசாலைக்கு அருகே சாலையோர வியாபாரி ஒருவர், கரும்பு வியாபாரம் செய்துகொண்டிருந்துள்ளார்.
அவற்றை அப்புறப்படுத்துமாறு கூட்டுறவு ஊழியர்கள் கூறியுள்ளனர். ஆனால், அப்புறப்படுத்தாமல் அந்த வியாபாரி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வியாபாரி, அரிவாளால் ஊழியர்களைத் தாக்கியுள்ளார். இதில் ஆண்டிபட்டி கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் கோட்டைச்சாமி, விற்பனையாளர்கள் பெரியசாமி, முருகேசன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.