போலி தொலைபேசி அழைப்பால் பாமர மக்கள் ஏமாந்த கதையைப் பலமுறை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு மாநில முதலமைச்சரின் மனைவியும், மக்களவை உறுப்பினருமான ஒருவர் ஏமாந்த விசித்திர கதை பஞ்சாபில் அரங்கேறியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராகக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமரீந்தர் சிங் பதவி வகித்துவருகிறார். இவரின் மனைவியான ப்ரனீத் கவுர் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார்.
சில நாட்களுக்கு முன் ப்ரனித் கவுருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், தான் பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து அழைப்பதாகவும், வங்கிக் கணக்கு தொடர்பாக சில அப்டேட்டுகளை செய்ய வங்கிக்கணக்கு குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறும் கேட்டுள்ளார்.
ப்ரனித் கவுரும் அப்பாவியாக வங்கிக் கணக்கு எண், ஏடிஎம் அட்டையில் உள்ள விவரம் எனத் தொடங்கி மொபைல் ஓடிபி வரை உளறிக்கொட்டியுள்ளார். தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு சில மணிநேரம் கழித்து ப்ரனீத் கவுருக்கு குறுந்தகவல் வந்துள்ளது. அந்தக் குறுந்தகவலைப் பார்த்ததும் அதிர்ந்துபோனார் ப்ரனீத் கவுர். அதில், அவரது வங்கிக்கணக்கிலிருந்து 23 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் இருந்தது.