சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பேசின்பிரிட்ஜ் மற்றும் புறநகர் ரயில்களில் செல்லக்கூடிய பயணிகளை குறிவைத்து வடமாநில கொள்ளையர்கள் சிலர் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் செல்வதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இதில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை 15 அருகே சந்தேகத்தின் பேரில் நடமாடிய 5 வடமாநிலத்தவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
இதனையடுத்து ஐந்து பேரையும் கடந்த 6ஆம் தேதி கைது செய்த போலீஸார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் ஓடும் ரயில்களில் பயணிகளை குறிவைத்து கொள்ளை அடிப்பவர்கள் என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 25 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.