சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ளது வால்டாக்ஸ் சாலை. இந்த சாலையின் அருகே உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் ஏராளமான சிறுவர்கள் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருவதாக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், வால்டாக்ஸ் சாலையில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள நகை பட்டறை உள்பட ஐந்து இடங்களில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டதில் 61 சிறுவர்கள் கொத்தடிமைகளாக பணியில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பணிபுரிந்து வந்த 61 சிறுவர்களும் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், நகைக்கடை உரிமையாளர்கள் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு முன் பணம் கொடுத்து பல வருடங்களாக கொத்தடிமைகளாக பணியில் அமர்த்தி இருந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த 61 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். பின்னர் இதுகுறித்து ஆர்டிஓ, வட்டாட்சியருக்கு குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் காப்பகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சிறுவர்களை கொத்தடிமைகளாக பணியில் அமர்த்திய நகைப் பட்டறை உரிமையாளர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.