தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

குட்கா கண்டெய்னரை துரத்தி பிடித்த போலீசார்; சிக்கிய 5.5 டன் குட்கா பொருட்கள்! - ஐந்து டன் குட்கா பறிமுதல்

சினிமா பட பாணியில் 96 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து, 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐந்தரை டன் குட்கா கண்டெய்னரை மயிலாப்பூர் தனிப்படை காவல் துறையினர் மடக்கி பிடித்துள்ளனர்.

banned tobacco seized in chennai
banned tobacco seized in chennai

By

Published : Oct 24, 2020, 3:07 AM IST

சென்னை: சென்னைக்கு விநியோகம் செய்ய டன் கணக்கிலான குட்கா கொண்டு செல்லப்பட்ட கண்டெய்னர் லாரியை வேலூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை தனிப்படை காவல் துறையினர் பின்தொடர்ந்து வளைத்துப் பிடித்தனர்.

தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு 2014 முதல் தடை நீடிக்கிறது. இதற்கிடையில் 2016ஆம் ஆண்டு சென்னை அருகே முறைகேடாக குட்கா குடோன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அதில் நடந்த ஊழல் வழக்காக இன்றளவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னையில் குட்கா விற்பனை தொடர்பாக காவல் துறையினர் விசாரணையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இச்சூழலில் செப்டம்பர் மாதம் கோட்டூபுரத்தில் கடைகளுக்கு குட்காவை விநியொகம் செய்த புருசோத்தமன் என்பவரை 250 கிலோ குட்காவுடன் கைது செய்து சிறையிலடைத்தனர். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரிகள் மூலமாக குட்கா கடத்தப்படுவது தெரியவந்தது. இந்த குட்கா கடத்தல் கும்பலை கூண்டோடு பிடிக்க மயிலாப்பூர் துணை ஆணையர் சசாங் சாய் தலைமையில் தனிப்படை அமைத்து தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் முகாமிட்டனர்.

குட்கா கொண்டு வரப்படும் கண்டெய்னர் லாரியின் பதிவெண் கையில் இருந்ததால், அந்த சரக்கு லாரியை பின்தொடர்ந்தனர். சென்னையில் எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க பின் தொடர்ந்த போது, ஸ்ரீபெரும்புதூர் அருகே சரக்கு ஆட்டோவில் மாற்றி சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல முயன்ற போது தனிப்படை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர். லாரிக்குள் 5.5 டன் எடை கொண்ட சுமார் 45 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கண்டெய்னரில் குட்கா கொண்டு வந்த விருதுநகர் மாவட்டம் காளையார் குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் முத்துராஜ், விழுப்புரம் மாவட்டம் கண்ணன்காடு பகுதியைச் சேர்ந்த சிவராஜ், திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மூளையாக செயல்பட்ட நபர் கனகலிங்கம் என்கிற செந்தில் தலைமறைவாக உள்ளார். இதே போன்ற மூன்று கண்டெய்னர்கள் மூலம் வாரத்திற்கு சராசரியாக 75 டன் சென்னைக்கு சப்ளை செய்து வந்துள்ளனர் என்பது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கும்பலால் ஒரு மாதத்திற்கு மட்டும் பல கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் சென்னைக்கு கடத்தி வரப்படுகிறது. குட்காவிற்கு பெயரளவில் தடை நீடித்தாலும், சென்னையில் பெட்டி கடை வரை சகஜமாக குட்கா புழங்குவதற்கு, இந்த கும்பல் தான் முக்கிய காரணம் என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.

பெங்களூரில் இருந்து மொத்தமாக குட்கா பொருட்களை வாங்கி வந்து சென்னையில் விநியோகம் செய்து வந்த தலைமறைவாக உள்ள கனகலிங்கம் என்ற செந்திலையும் அவரது கூட்டாளி முனியப்பன் என்பவரையும் தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குட்கா பறிமுதல் செய்த, தனிப்படை உதவி ஆய்வாளர் இளையராஜா, தலைமை காவலர்கள் ராம மூர்த்தி, சுகுமார், ராம்குமார், மற்றும் தியாகராஜன், திருநாவுக்கரசு, சங்கர் தினேஷ் உள்ளிட்ட 6 பேர் கொண்ட தனிப்படை காவல் துறையினரை மயிலாப்பூர் துணை ஆணையர் சசாங் சாய் பாராட்டியுள்ளார். இந்நிலையில் மயிலாப்பூர் துணை ஆணையர் சசாங் சாய் ட்விட்டர் பக்கத்தில் ரெஸ்ட்லிங் விளையாட்டின் காணொலியைப் பதிவிட்டு, ”குட்கா கும்பலை பறந்து பறந்து அடிப்போம்" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details