ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஜெ.எஸ்.நகர் பகுதியில் ஓய்வு பெற்ற எல்.ஐ.சி அலுவலர் முருகேசன், அவரது மனைவி அரசுப் பள்ளி தலைமையாசிரியர் கிரிஜா ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மலர்விழி என்ற மகள் திருமணமாகி கணவருடன் ஈரோட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், விஜயதசமியை முன்னிட்டு பள்ளிகள் விடுமுறை என்பதால் சனிக்கிழமை மாலை முருகேசன் தனது மனைவி கிரிஜாவுடன் ஈரோட்டில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் இன்று மகள் வீட்டிலிருந்து தனது வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டினுள் நுழைந்து பீரோவிலிருந்த 40 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து முருகேசன் கோபிச்செட்டிபாளையம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஈரோட்டிலிருந்து தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கைரேகை, தடயங்களைச் சேகரித்து கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்நிலையம், நீதிமன்றம் வெகு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.