தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்கள் மற்றும் அதன் அலுவலர்களின் வீட்டில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். ஆர்டிஓ அலுவலகங்களிலும் சார்பதிவாளர் அலுவலகங்களிலும் மின்சாரத்துறை அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
கடந்த 75 நாள்களில் மட்டும் 127 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில், 6.96 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
75 நாள்களில் 33 அலுவலர்கள் கைது
இதில், 7.232 கிலோ தங்கம் மற்றும் 9.843 கிலோ வெள்ளி,10.52 கேரட் வைரம் மற்றும் வங்கி இருப்பு தொகை 37லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட 33 அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கி கைது செய்யப்பட்டுள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை அதிரடி சோதனை
இவர்களிடமிருந்து லஞ்ச தொகையான 62 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தவிர நேற்று (டிச.15) சுற்றுச்சூழல் துறை அலுவலகம் மற்றும் அதன் கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை நடத்திய சோதனையில், 1.38 கோடி பணம் மற்றும் 3 கிலோ தங்கம், 10 கேரட் வைரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
குறிப்பாக ஊரப்பாகத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு அலுவலர் வீட்டில் 62 லட்சம் ரூபாய், திருவாரூரில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் வீட்டில் 3.14 லட்சம் ரூபாய், வேலூர் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் வீட்டில் 58 கோடி ரூபாய் பணமும் 450 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பு பொறியாளர் பாண்டியன் வீட்டில் ஒரு கோடி ரூபாய் பணமும் மூன்று கிலோ தங்கமும் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஒரே நாளில் ரூ. 7.60 லட்சம் பறிமுதல்
அதேபோன்று கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் தொடர்புடைய இடங்களில் 11 லட்ச ரூபாய் பணம் மற்றும் 117 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே நாளில் விழுப்புரம், அந்தியூர், வாணியம்பாடி, தூத்துக்குடி, காஞ்சிபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 7.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் 30 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை அதிரடி சோதனை நடத்தியதில் 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர், ஓசூர், கடலூர், ஆரம்பாக்கம், மார்த்தாண்டம், மேட்டூர், நாகபட்டினம், விருதுநகர் ஆகிய 9 ஆர்.டி.ஓ அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். 75 நாளில் நடந்த சோதனையில் 33 அரசு அலுவலர்களை கைது செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:விவசாயிகளுக்கு ஆதரவாக சீக்கிய துறவி தற்கொலை!