கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கிவரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் உதவி பொதுமேலாளராக உள்ள லட்சுமி பிரகாஷ் என்பவர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில், ”2018ஆம் ஆண்டு வங்கியில் நடந்த கணக்கு தணிக்கையின்போது 33 கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளதாகத் தெரியவந்தது. வங்கியின் முன்னாள் உதவி பொதுமேலாளர் சிவசுப்பிரமணியம் உள்பட நான்கு பேர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பிலான ஆவணங்கள் எங்களிடமிருக்கிறது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
போலி ஆவணங்கள் மூலம் 33 கோடி ரூபாய் மோசடி - முன்னாள் உதவி பொது மேலாளர் கைது
அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் சௌந்தர்ராஜன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த புரோக்கர் மகேஷ் (41), சூலூரைச் சேர்ந்த பாண்டியன் (44), செலக்கரிச்சலைச் சேர்ந்த கோமதி (42) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சூலூர், பல்லடம், கரடிவாவி ஆகிய பகுதிகளில் இல்லாத கோழிப்பண்ணைகள் இருப்பதாகக் காண்பித்து, அப்போது வங்கி மேலாளராக இருந்த சிவசுப்பிரமணியன் மூலம் நிலத்தின் மதிப்பை உயர்த்திக்காட்டி, கட்டப்படாத கட்டுமானங்களைக் கட்டியதாகப் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.33 கோடி கடனாகப் பெற்று திருப்பி செலுத்தாமல் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவந்தது.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட வங்கியின் முன்னாள் உதவி பொது மேலாளர் சிவசுப்பிரமணியம், மகேஷ், பாண்டியன், கோமதி ஆகிய 4 பேரையும் கைதுசெய்தனர். பின்னர், அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: மலைவாழ் மக்களின் பொங்கல் கொண்டாட்டம்