திருவள்ளூர் மாவட்டம் மசூதி தெருவில் கீதாஞ்சலி நகை மாளிகை எனும் கடையை நடத்திவருபவர் மகேந்திரன் (52). இவர் தங்க கட்டிகளை வாங்கி நகையாக தயாரித்து ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு நகைக் கடைகளுக்கு பாதுகாப்பு கருதி மக்களோடு மக்களாக இருசக்கர வாகனத்திலோ அல்லது ஆட்டோவில் சென்று நகைகளை சப்ளை செய்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று (டிச.10) காலை திருவள்ளூரில் இருந்து சேகர் என்பவரின் ஆட்டோவில் வந்த நகைக்கடை உரிமையாளர் மகேந்திரன், அவரது மகன் ஆசிப், அவரது உதவியாளர் ராஜ்குமார் ஆகியோர் பேரம்பாக்கம் சென்று அங்குள்ள ராஜேஸ்வரி நகை கடையில் சுமார் 60 கிராம் தங்க நகைகளை கொடுத்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து சுங்குவார்சத்திரத்தில் உள்ள மஹாவீர் நகை கடையில் 42 கிராம் தங்க நகைகளை கொடுத்து விட்டு, இறுதியாக மீதமுள்ள சுமார் 300 சவரன் தங்க நகைகளோடு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது மாம்பாக்கம் அருகே செயிண்ட் கோபின் எனும் தனியார் தொழிற்சாலை அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஆட்டோவை வழிமறித்து கத்திமுனையில் நகைக்கடை உரிமையாளர் மகேந்திரன், ஆசிப், ராஜ்குமார் ஆகியோரை மிரட்டி அவர்களிடம் இருந்து சுமார் 1 கோடியே 11 லட்சம் மதிப்பிலான 300 சவரன் தங்க நகைகள் வைத்துள்ள பையை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது உதவியாளர் ராஜ்குமார் முகத்தில் சிறிதளவு கத்தியால் காயம் ஏற்பட்டது. இதில் அதிர்ச்சி அடைந்த நகைக்கடை உரிமையாளர் மகேந்திரன் இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளிக்காமல் அவரது வீட்டிற்கு சென்று அங்கிருந்து தொலைப்பேசி வாயிலாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறைக்கு புகார் தெரிவித்துள்ளார்.