சென்னை: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த காவலர் உள்பட மூவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை கோட்டை சத்யா நகர் அருகே காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, 17 வயது சிறுவன் கஞ்சா போதையில் சந்தேகத்திற்கிடமாக திரிந்து கொண்டிருந்துள்ளார். சிறுவனைப் பிடித்து விசாரித்த போது, வியாசார்பாடியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரிடம் பணம் கொடுத்து வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதனால் சிறுவன் அளித்த தகவலின் பேரில் வியாசர்பாடியைச் சேர்ந்த ராம்குமாரை கைதுசெய்து காவல் துறையினர் விசாரித்துள்ளனர். விசாரணையில் காவலர் ஒருவரிடம் கஞ்சா வாங்கி விற்று வருவதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கோட்டை காவல் துறையினர், உடனடியாக கஞ்சா விற்றுவந்த காவலரை கைதுசெய்து விசாரிக்கும் போது, அவர் ஆயுதப்படை காவலராக இருந்த அருள் பிரசாத் என்பது தெரியவந்தது.
மேலும், வேப்பேரியில் உள்ள இவரது வீட்டை ஆய்வு செய்தபோது, சுமார் 150 கிராம் கஞ்சா பொட்டலங்களாக சிக்கியுள்ளது. இதனையடுத்து காவலர் அருள் பிரசாத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மூலம், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் பல்வேறு பகுதியில் பொட்டலங்களாக மடித்து விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, கஞ்சா விநியோகம் செய்துவந்த ஆயுதப்படை காவலர் உள்பட மூன்று பேரையும் கோட்டை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.