சென்னையடுத்துள்ள நீலாங்கரை பகுதியில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜெர்ரி, அவரது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர், தனியார் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியராக பணியில் உள்ளார். இந்நிலையில், அவரது வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்துக்கொண்டு, திருடும் நோக்கத்தோடு கொள்ளையர்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்து உள்ளனர்.
கைதான கொள்ளையர்கள் வாணி கருப்பு, சுரேந்திரன் தரைத் தளத்தின் வழியே வீடு புகுந்தக் கொள்ளையர்கள் அங்கிருந்த ஆசிரியர் ஜெர்ரியை தாக்கி கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது முதல் தளத்தில் இருந்த ஆசிரியர் ஜெர்ரியின் மனைவி வழக்கத்திற்கு மாறாக தனது வீட்டில் சில சத்தங்களும், ஆள்நடமாட்டங்களும் தென்பட்டதை உணர்ந்து சுதாரித்துக்கொண்டுள்ளார்.
கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 40 சவரன் நகைகள். தனது கணவரை தாக்கியக் கொள்ளையர்கள், தன்னையும் தாக்க வருவதை அறிந்து சாதுரியமாக அறை ஒன்றுக்குள் சென்று பூட்டிக் கொண்டு உள்ளார். உடனடியாக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து புகார் செய்துள்ளார். கட்டுப்பாட்டு அறையின் மூலமாக இந்த தகவலை அறிந்த அடையாறு காவல்துறையினர், துரிதமாக செயலாற்றி சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சோதனைக்கு வந்த காவல்துறையினரைக் கண்ட, கொள்ளையர்கள் பணம், நகைகளை கொள்ளையடிக்க முடியாமல் தாங்கள் கொண்டுவந்த இருசக்கர வாகனத்தையும் அங்கேயே விட்டு தப்பியோடினர். கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஜெர்ரியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர், இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காணொளிக் காட்சிகளை வைத்து ஆராய்ந்தபோது, அதிலிருந்தவர்கள் விருதுநகரைச் சேர்ந்த வாணி கருப்பு (27), மதுரையைச் சேர்ந்த சுரேந்திரன் (24) என தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர்களை கைது செய்து விசாரனையை மேற்கொண்ட அடையாறு காவல்துறையினருக்கு, அதிர்ச்சி தரும் பல உண்மை சம்பவங்கள் தெரியவந்துள்ளன. இந்த கொள்ளைக்கும்பல் சென்னை மட்டுமின்றி மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்த்தியிருப்பதும் இவர்கள் மீது மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன என்பதும், இதுவரை நடத்திய விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கொள்ளைக்கும்பலைச் சேர்ந்த தலைமறைவாக உள்ள சிவகங்கையைச் சேர்ந்த சுகுமார், முத்துபாண்டி ஆகியோரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவருகின்றனர். முன்னதாக, இந்த கும்பல் சென்னை பெசன்ட் நகரில் வசித்தும் வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்தில் இணை இயக்குனராக பணியாற்றிவரும் பாரதி (38) என்பவரது வீட்டிலிருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரத்தோடு, சுமார் 40 சவரன் நகை, 2 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், 35 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவை திருடியிருந்தது கவனிக்கத்தக்கது.
இவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : கூரை வீடுகளில் தீ விபத்து: 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதம்