தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

ஊரடங்கில் குடும்ப வன்முறை - 14 பேர் கைது!

சென்னை: ஊரடங்கின் போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 669 புகார்கள் வந்துள்ளதாகவும், அதில் 14 பேரை கைது செய்துள்ளதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு காவல் துறை தெரிவித்துள்ளது.

violence
violence

By

Published : Apr 28, 2020, 12:30 PM IST

ஊரடங்கால் அத்தியாவசியப் பணிகளில் இருப்போர் தவிர, பெரும்பாலானவர்கள் வீடுகளிலேயே இருக்கின்றனர். குறிப்பாக, ஆண்கள் வீட்டிலேயே நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். மேலும், மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், குடிப்பழக்கத்திற்கு ஆளான ஆண்களால் கடும் இன்னல்களுக்குப் பெண்கள் உள்ளாவதாகவும், வீட்டிலேயே இருப்பதால் கூடுதலான வீட்டு வேலைக்கு உட்படுத்தி கொடுமைப்படுத்துவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில், சென்னையில் மட்டும் ஊரடங்கு நாட்களில் பெண்கள் மீது நடக்கும் குற்றம் தொடர்பாக, அவசர உதவி எண் 100க்கு 549 அழைப்புகள் வந்ததாகவும், பெண்களுக்கான அவசர உதவி எண் 1091க்கு 16 அழைப்புகளும், சிறுவர்களுக்கான உதவி எண் 1098க்கு 102 அழைப்புகள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவை அனைத்திற்கும் உடனடியாகத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்ததையடுத்து, 7 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக 7 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு காலத்தில் ஏற்படும் மனப்பிரச்னை, குடும்பப் பிரச்னை ஆகியவற்றிற்கு ஆலோசனை வழங்க 10 சிறப்புப் பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, தொலைபேசி வாயிலாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் 161 குழந்தைகள் நல ஆலோசகர்கள், உதவி ஆய்வாளர் நிலையில் நியமிக்கப்பட்டு பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு வருகின்றனர் என்றும், தொடர்ந்து பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிரிவு காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பெண்ணின் விரல்களை வெட்டியவர் கைது

ABOUT THE AUTHOR

...view details