சென்னை: முதன்முறையாக சிபிஐ வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருவதால், அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை குறித்து அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரான நடராஜனிடம் சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி பிலிப், ஐஜி சங்கர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
2011ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து சென்னையில் உள்ள சுரானா கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தில் சிபிஐ அதிரடியாக சோதனை நடத்தியது. சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில். 400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் அனைத்தும் யானை கவுனியில் உள்ள சுரானா அலுவலகத்தில் 72 சாவிகள் கொண்ட லாக்கரில் சிபிஐ அலுவலர்கள் வைத்திருந்தனர்.
இச்சூழலில், சுரானா கார்ப்பரேஷன் பல வங்கிகளில் வாங்கிய கடனுக்காக தங்கத்தை வங்கிகளிடம் ஒப்படைக்க நீதிமன்ற உத்தரவிட்டதன் பேரில், அதனைக் கையாளும் வங்கி அலுவலராக ராம சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார். இச்சமயத்தில் சீல் வைக்கப்பட்ட 400 கிலோ தங்கத்தை எடுத்து எடை போட்டு பார்த்தபோது 103 கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது.
103 கிலோ தங்கம் மாயம்: சிபிசிஐடி 3ஆவது முறையாக ஆய்வு
இதனையடுத்து உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டு திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணையைத் தொடங்கினர். முதல்கட்டமாக தங்கம் வைக்கப்பட்ட லாக்கரை சென்று சிபிசிஐடி காவல் துறையினர் ஆய்வு செய்தபோது கள்ளச்சாவி போட்டு திருடியது தெரியவந்தது.
தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் வரவழைத்தும் ஆய்வு நடத்தினர். இதுமட்டுமில்லாமல் சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வீ பிலிப், ஐஜி சங்கர் உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த வழக்கை தொழில்நுட்ப ரீதியாக விசாரணை நடத்தவிருப்பதாக டிஜிபி தெரிவித்துச் சென்றார்.
முதன்முறையாக சிபிஐ வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருவதால், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை குறித்து அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரான நடராஜனிடம் சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி பிலிப், ஐஜி சங்கர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
103 கிலோ தங்கம் திருடப்பட்ட வழக்கு - லாக்கர் தயாரித்த நிறுவனத்திடம் விசாரணை
இந்த ஆலோசனை எழும்பூரில் உள்ள தலைமை குற்றவியல் வழக்கறிஞரின் அலுவலகத்தில் சுமார் 3 மணி நேரமாக நடைபெற்றது. அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகள் பெற்ற பின்னரே, வழக்கை முன் நகர்த்திச் செல்ல முடியும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.