விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். ஓட்டுநரான இவர் தனது ஓட்டுநர் நண்பரின் பரிந்துரையின் பேரில் கடந்த சில ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலுள்ள தனியாருக்குச் சொந்தமான ஜவுளி உற்பத்தி தொழிற்சாலையில் பேருந்து ஓட்டுநராகப் பணிக்குச் சேர்ந்தார்.
இவர் தினசரி மாவட்டம் முழுவதும் இந்தத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களை பேருந்து மூலம் தொழிற்சாலைக்கு அழைத்து வரும் பணியையும், தேவைப்பாட்டால் வேறு வாகனங்களையும் இயக்கி வந்துள்ளார்.
இந்நிலையில் பரசுராமனுக்கு தொழிற்சாலை நிர்வாகம் கடந்த சில மாதங்களாக ஊதியத்தை வழங்கிடவில்லையென்று கூறப்படுகிறது. இது குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் கேட்டும் எவ்வித பலனும் ஏற்படவில்லையென்றும் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பரசுராமன் வழக்கம்போல் பணி முடித்த தொழிலாளர்களை வீட்டில் விட்டு விட்டு பேருந்தை எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊரான விருத்தாசலத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார்.
அங்கு சென்ற அவர் பேருந்தை விருத்தாசலம் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். பல மணி நேரமாக தனியாருக்கு சொந்தமான பேருந்து நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ஊதியத்தை வழங்காத ஆத்திரத்தில் பேருந்தை நிறுத்திச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வறுமையால் நேர்ந்த சோகம்: குழந்தைகளுக்குத் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு தாயும் தீக்குளிப்பு!