ரோம்:ஐரோப்பாவில் தற்போது வெப்ப அலையின தாக்கம் அதிகமாக இருப்பதால் நீர்நிலைகள் வறண்ட நிலையில் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, இத்தாலியின் போ நதியில் நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. நீர் குறைந்ததால், நதியில் வெடிகுண்டு போன்ற ஒன்று மிதப்பதை கண்ட மீனவர் பார்த்துள்ளார். அதை ஆய்வு செய்ததில், இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தைச் சேர்ந்த வெடிகுண்டு என கண்டறியப்பட்டது.
இத்தாலியின் மாந்துவா நகருக்கு அருகே உள்ள போர்கோ விர்ஜிலியோ என்ற கிராமத்தின் வடக்கு பகுதியில் கடந்த ஜூலை 25ஆம் தேதி அந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அந்த வெடிகுண்டில் எடை 450 கிலோ எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த வெடிகுண்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்று வெடிக்க வைக்கும் பணி நேற்று (ஆக. 7) நடைபெற்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால், கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ள குவாரிக்கு வெடிகுண்டு எடுத்துச்செல்லப்பட்டது.
அங்கு பாதுகாப்பான முறையில் செயலிழக்க வைக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பொறியாளர்கள் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், இது அமெரிக்க நாட்டின் தயாரிப்பு எனவும் 240 கிலோ வெடிமருந்தை கொண்டது எனவும் அவர்கள் தெரிவித்தனர். பின்னர், குவாரியில் அந்த வெடிகுண்டை புதைத்து வைத்து, பாதுகாப்பான முறையில் அது வெடிக்க வைக்கப்பட்டது.