கோலாலம்பூர்: எல்-நினோ(El Nino) இந்த வார்த்தை பலரும் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றம் மற்றும் கடுமையான வெப்பம் ஆகியவற்றின் பாதிப்பை உலக நாடுகள் மொத்தமும் எதிர்கொண்டு வருகின்றன.
அமெரிக்கா தேசிய சுற்றுச்சூழல் கணிப்பு அமைப்பு அறிக்கை:கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட எல்-நினோ பாதிப்பை தொடர்ந்து தற்போது மீண்டும் அதன் தாக்கம் தனது தாண்டவ ஆட்டத்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த வாரத்தில் மலேசியாவின் பல பகுதிகளில் வறட்சி மற்றும் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய சுற்றுச்சூழல் கணிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் அதிக கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றப்படும் நிலை புவி வெப்பம் அடைந்து வருவதாகவும் இதனால் பசிபிக் பெருங்கடலில் எல் நினோ பாதிப்பு உருவாகி வருவதாகவும் எச்சரித்துள்ளது.
மலேசிய சுகாதாரத்துறையின் தகவல்:இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மலேசியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளின் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருப்பதாகவும், மழைப்பொழிவு முற்றிலும் குறைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெப்பம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை எல்-நினோ தாக்கத்தின் வெப்பம் சார்ந்த நோய்களால் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 23 பேர் வெப்பத்தினால் ஏற்படும் சோர்வாலும், 11 பேர் வெப்ப கட்டிகளாலும், 5 பேர் பக்கவாதம் போன்ற நோய்களாலும் பாதிக்கப்படுள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வெப்பத்தால் மனிதர்கள் மட்டும் அல்ல ஏராளமான கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், எல்-நினோ காரணத்தால் ஏற்பட்டுள்ள வெப்பத்தால் மக்கள் மத்தியில், மலேரியா, டெங்கு, மஞ்சள் காமாலை, காலரா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு மற்றும் நீர் மூலம் பரவும் நோய்களின் தாக்கம் இருக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அதீத வெப்பத்தால் உடலில் அதீத வியர்வை, மனக்குழப்பம், வறண்ட சருமம் மற்றும் வெப்பத் தடிப்புகள் போன்றவற்றையும் உடலில் வளர்சிதை மாற்றத்தையும் மக்கள் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல் மற்றும் பிற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.
(WMO)உலக வானிலை அமைப்பின் அறிக்கை:இது குறித்து உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வெயிலின் தாக்கம் இருக்கும் நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம், வெயிலில் வேலை செய்யும் நபர்கள் அதிக நேரத்தை அங்கு செலவிட வேண்டாம், தேவைக்கு குடையை கையில் எடுத்த செல்ல வேண்டும், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வெளியில் செல்வதை முற்றிலும் தவிற்க வேண்டும், உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
ஆய்வாளர்களின் அறிக்கை:வெயிலின் தாக்கத்தால், நைட்ரஜன்-டை-ஆக்சைடு, சல்பர்-டை-ஆக்சைடு மற்றும் ஓசோன் துகள்கள் போன்ற மாசுபடுத்திகள் சுவாச அமைப்புகளை பாதிக்கும் எனவும் இது ஆஸ்துமா தாக்குதலை தூண்டி, சுவாச தொற்று அபாயத்தை அதிகரிக்கச்செய்யும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் முகக்கவசங்களை அணிந்துகொள்வது சிறந்தது என தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், ஆஸ்துமா நோயாளிகள் இன்ஹெய்லர்களை கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.