மாஸ்கோ (ரஷ்யா): உக்ரைன் நேட்டோவில் இணைவது ரஷ்யாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும் என உக்ரைனின் முடிவிற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தனது முடிவில் உக்ரைன் உறுதியாக இருந்ததால், கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியது. அப்போது உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் உதவியதால் ரஷ்யாவின் எண்ணம் எளிதில் ஈடேறவில்லை.
இதனால் ரஷ்யா தனியார் ராணுவம் என தன்னை சொல்லிக் கொள்ளும் கூலிப்படையான வாக்னர் குழுவை போரில் களமிறக்கியது. உக்ரைனில் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியதற்கு வாக்னர் குழுதான் காரணம் என அந்த குழு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், ரஷ்யா தங்களுக்கு சரியாக ராணுவ உதவிகளை வழங்கவில்லை என்று கூறியும், தங்கள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியும் வாக்னர் குழு ரஷ்யாவிற்கு எதிராக திரும்பியது.
இதன் காரணமாக சொந்த நாட்டிற்கு எதிராகத் திரும்பும் வாக்னர் குழுவின் செயல் முதுகில் குத்துவது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார். இந்த நிலையில், வாக்னர் குழு ரஷ்யாவின் ராணுவத் தலைமையகமாக கருதப்படும் ரோஸ்டோவை கைப்பற்றியதாக அறிவித்தது. மேலும் மாஸ்கோ ராணுவத் தலைமையை கைப்பற்றப் போவதாகவும், ராணுவத் தலைமையை மாற்றப் போவதாகவும் அறிவித்தது. இதன் மூலம் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எதிராகவும், ராணுவத்திற்கு எதிராகவும் தனது நடவடிக்கையை வாக்னர் குழு தொடங்கியது.
இதனையடுத்து ரஷ்ய அதிபர் புதின் வாக்னர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உஸ்பெஸ்கிஸ்தான், கஜகஸ்தான், பெலாரஸ் ஆகிய நாட்டு அதிபர்களிடம் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஸின் உடன் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் ல்காஷென்கோ பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
பதட்டங்களை தனிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதாக பெலாரஸ் அதிபர் தெரிவித்த சிறிது நேரத்திலேயே வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஸின் தனது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்க ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. பெலாரஸ் அதிபர் உடனாட உடன்படிக்கையின் கீழ், வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஸின் மாஸ்கோவை நோக்கிய தனது படைகளின் அணிவகுப்பை நிறுத்த முடிவு செய்தார்.