லண்டன்: இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பெண்களின் உணவுப் பழக்கவழக்கம் மற்றும் ஆரோக்கியம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், குறிப்பாக சுமார் 22 ஆண்டுகளில் வாழ்ந்த 26 ஆயிரம் பெண்களின் உணவுப்பழக்கத்தை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வறிக்கை பிரபல கார்டியன் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையின்படி, பல ஆண்டுகளாக தொடர்ந்து இறைச்சி உண்ணும் பெண்களைவிட, சைவ உணவுகளை எடுத்துக்கொள்ளும் பெண்கள் பலருக்கு இடுப்பு எலும்புகள் பலவீனமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
அவர்களுக்குப் போதுமான ஊட்டச்சத்து கிடைக்காததால், அதிகளவு எலும்புமுறிவு ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுமையின்போது எலும்பு முறிவுகள் ஏற்படுவது வழக்கம் என்றாலும், சைவ உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்பவர்களுக்கு சீக்கிரமாகவே எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறைச்சி உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்கள் எடை குறைவாக இருப்பார்கள் என்றும், தசைகளில் கொழுப்பு குறைவாக இருப்பதால் கீழே விழுந்தால் எலும்புகள் நேரடியாகப் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.