தமிழ்நாடு

tamil nadu

அமெரிக்க செனட் வாக்கெடுப்பில் டை பிரேக் செய்த கமலா ஹாரிஸ் - ஜான் சி கால்ஹவுன் சாதனையை முறியடித்தார்!

By

Published : Jul 13, 2023, 11:50 AM IST

அமெரிக்க செனட் சபையில், சமத்துவ வேலைவாய்ப்பு ஆணையத்தின் ஆணையர் பதவிக்கு கல்பனா கோட்டகலை நியமிப்பது தொடர்பான வாக்கெடுப்பில், டை பிரேக்கராக செனட்டின் தலைவர் கமலா ஹாரிஸ் வாக்களித்துள்ளார். இதன் மூலம், கல்பனா கோட்டகலின் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

KAMALA HARRIS
கமலா ஹாரிஸ்

அமெரிக்கா:அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பரில் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றார். இதன் மூலம், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர், முதல் கருப்பின பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெற்றார் கமலா ஹாரிஸ்.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இணையான இந்த இடைத்தேர்தலும் பார்க்கப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகள் உள்ளன. ஒன்று செனட் சபை, மற்றொன்று பிரதிநிதிகள் சபை. 100 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். இதில் 35 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கும். 435 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள். இதில் அனைத்து இடங்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். அந்த வகையில் கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது.

இதனிடையே அதிபர் ஜோ பைடன், சட்ட வல்லுனரும், சமூக உரிமை ஆர்வலருமான கல்பனா கோட்டகல் என்பவரை சமத்துவ வேலைவாய்ப்பு ஆணையத்தின் ஆணையர் பதவிக்கு பரிந்துரை செய்திருந்தார். கல்பனா கோட்டகல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

இந்த நிலையில், கல்பனா கோட்டகலை சமத்துவ வேலைவாய்ப்பு ஆணையத்தின் ஆணையராக நியமிப்பது தொடர்பாக அமெரிக்காவின் செனட் சபையில் நேற்று(ஜூலை 12) வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், ஆதரவாக 50 வாக்குகளும், எதிர்ப்பாக 50 வாக்குகளும் பதிவாகின. இதைத் தொடர்ந்து டை- பிரேக் செய்வதற்காக செனட் சபையின் தலைவரும், துணை அதிபர் கமலா ஹாரிஸ் வாக்களித்தார். கமலா ஹாரிஸ், கல்பனா கோட்டகல் நியமனத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். இதையடுத்து கல்பனா கோட்டகல் நியமனம் உறுதி செய்யப்பட்டது.

செனட் சபையின் தலைவர் கமலா ஹாரிஸ் பல்வேறு சட்டங்களை இயற்றுவதற்காக பல முறை வாக்களித்து உள்ளார். இதில், 31வது முறையில் அவர் கல்பனா கோட்டகல் நியமனத்தை உறுதி செய்யும் வகையில் வாக்களித்துள்ளார். இதன் மூலம், செனட்டில் அதிக முறை வாக்களித்த தலைவர் என்ற சாதனையை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார். இதற்கு முன்பாக கடந்த 1825ஆம் ஆண்டு முதல் 1832ஆம் ஆண்டு வரை செனட் சபையின் தலைவராக பதவி வகித்த ஜான் சி கால்ஹவுனின் சாதனையை கமலா ஹாரிஸ் முறியடித்து உள்ளார். வாக்களிப்பதை பொறுத்தவரை கால்ஹவுன் எட்டு ஆண்டுகளில் செய்த சாதனையை கமலா ஹாரிஸ் இரண்டரை ஆண்டுகளில் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஷ்ய அதிபர் - வாக்னர் குழு சந்திப்பு.. நாட்டுக்காக மீண்டும் போராட தயார் என வாக்னர் குழு தகவல்!

ABOUT THE AUTHOR

...view details