நியூயார்க்: தனி நாடாக உருவான தைவானை, சீனா தங்களுடையது என கூறி வருகிறது. தைவானை கைப்பற்ற போர் தொடுக்கப் போவதாகவும் சீனா மிரட்டல் விடுத்து வருகிறது. இதனால் தைவானை ஆதரிக்கும் நாடுகளை சீனா கடுமையாக எதிர்க்கிறது. சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது.
அண்மைக்காலமாக தைவான் ஜலசந்தி வழியாக சர்வதேச கப்பல்கள் செல்வதை சீனா எதிர்த்து வருகிறது. தைவான் விவகாரத்தில் சீனாவை எதிர்க்கும் அமெரிக்கா, அவ்வப்போது தைவான் ஜலசந்தி வழியாக தனது போர்க்கப்பல்களை இயக்கி சீனாவை எச்சரித்து வருகிறது. மேலும் உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு சீனா மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருவதையும் அமெரிக்கா எதிர்க்கிறது. இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பாக இருநாட்டு அதிபர்களான ஜோ பைடன் மற்றும் ஜி ஜின்பிங் இருவரும் வரும் நவம்பர் மாதம் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.