நியூ யார்க் :அமெரிக்காவில் காணாமல் போன இந்திய வம்சாவெளியை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். விர்ஜினியா மாகாணத்தை சேர்ந்தவர் இந்திய வம்சாவெளியான அங்கித் பாகெய். குடும்பத்தினருடன் வசித்து வந்தார். விர்ஜினியா பல்கலைக்கழகத்தின் மென்பொருள் பொறியியல் பட்டம் வென்ற அங்கித் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி அங்கித் பாகெய் காணாமல் போனதாக கூறப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அங்கித்தின் குடும்பத்தினரும் அவர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டாலர் சன்மானம் வழங்குவதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் கொடுத்தனர்.
இந்நிலையில், மேரிலேண்ட் பகுதியில் உள்ள சிறிய ஏரியில் அங்கித்தின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். அங்கித்தின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஆய்வுக்காக தலைமை மருத்துவ ஆய்வாளரிடம் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கித்துக்கு மருத்துவ பிரச்சினைகள் இருந்ததாகவும், அதன் காரணமாக பல்வேறு உயிர் காக்கும் மருந்துகளை அவர் எடுத்து வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.
மருந்துகள் வாங்க சென்ற போது தான் அங்கீத் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதேநேரம் மேரிலேண்ட் ஏரியில் அங்கித்தின் சடலத்துடன் எந்தவித சந்தேகம் அளிக்கக் கூடிய விஷயங்களும் கிடைக்கப் பெறாத நிலையில் மருத்துவ அவசர நிலையால் அங்கீத் இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க :பிரதமர் மோடி அவதூறு வழக்கு - ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!