ஈரான் நாட்டில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் முழு உடலையும் மறைக்கும் வண்ணமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அவ்வாறு முறையாக அணியாதவர்களை கண்காணிக்க ‘காஷ்ட்-இ-எர்சாத்’ (Gasht-e Ershad) என்ற அறநெறி காவல்துறை தனியாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் 22 வயதான மஹ்ஸா அமினி (Mahsa Amini) என்ற பெண், ஈரான் தலைநகரான தெஹ்ரான் சென்றபோது முறையாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி, அவரை அறநெறி காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் அவர் இருந்தார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அமினி உயிரிழந்தார்.
இச்சம்பவம் ஈரான் நாட்டில் உள்ள பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களில் பெண்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு எதிராக கோஷங்களை எழுப்புகின்றனர்.
தொடர்ந்து ஹிஜாப் உடையை எரித்தும் கூந்தலை வெட்டியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டத்தின் தீவிரம் அதிகமடைந்து வருகிறது.