தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

26/11 மும்பைத் தாக்குதல் : தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல்! - தஹாவூர் ராணாவை நாடு கடத்த ஒப்புதல்

2008-ல் நடந்த மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு, அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

US court
அமெரிக்கா

By

Published : May 18, 2023, 3:50 PM IST

வாஷிங்டன்:மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பினர் நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டுகளை வைத்தும், துப்பாக்கியால் சுட்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் அமெரிக்கர்கள்.

இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடிய மும்பை போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். அதில், அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டார்.

மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழில் அதிபரான தஹாவூர் ராணா என்பவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அமெரிக்காவில் உள்ள அவரை கைது செய்ய வேண்டும் என்றும்; இந்திய அரசு அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து கடந்த 2009ஆம் ஆண்டு தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். மும்பை தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதியுடன் சேர்ந்து, கனடா குடியுரிமை பெற்ற தஹாவூர் ராணா சதித்திட்டம் தீட்டியதாக கூறப்பட்டது.

இது தொடர்பான வழக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மும்பை தாக்குதலில் தஹாவூர் ராணாவின் தொடர்பு குறித்து இந்தியாவில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்தவும் மத்திய அரசு கோரிக்கை விடுத்து வந்தது.

இந்த நிலையில், அமெரிக்க சிறையில் உள்ள தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் நேற்று முன்தினம்(மே.16) ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான விசாரணையின் போது, இந்திய அரசு தரப்பில், "தஹாவூர் ராணாவின் பால்யகால நண்பர் பாகிஸ்தானிய - அமெரிக்கரான டேவிட் கோல்மன் ஹெட்லி லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு கொண்டிருந்தார். அதை அறிந்தும் ஹெட்லிக்கு ராணா உதவியுள்ளார். ராணா பயங்கரவாத அமைப்பு மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு ஆதரவளித்துள்ளார். அதேபோல் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தவிருப்பது தொடர்பாக ராணா அறிந்திருந்தார். அந்த சதித்திட்டத்தில் ராணாவுக்கும் பங்கு இருக்கிறது என்பதற்காக சாத்தியமான காரணங்கள் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டது. தஹாவூர் ராணா தரப்பு வழக்கறிஞர் நாடு கடத்த எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, தஹாவூர் ராணாவை நாடு கடத்துவதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த கலிபோர்னியா மாஜிஸ்திரேட் நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியன், ராணாவை நாடு கடத்த உத்தரவிட்டார். ராணாவை நாடு கடத்துவதற்காக இந்திய அரசு கூறிய காரணங்களில் போதிய முகாந்திரம் இருப்பதாலும், அதற்கான போதுமான ஆதாரங்களை இந்திய அரசு சமர்ப்பித்துள்ளதாலும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார். ராணாவை நாடு கடத்தக் கோருவதற்கான அதிகாரம் இந்தியாவுக்கு உள்ளது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: Twitter New CEO: ட்விட்டருக்கு புதிய சிஇஓ.. யார் இந்த லிண்டா யாக்கரினோ?

ABOUT THE AUTHOR

...view details