வாஷிங்டன்:ரஷ்ய-உக்ரைன் போர் 11 மாதங்களாக நீடித்துவருகிறது. இதனிடையே பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளித்துவருகின்றன. அந்த வகையில், உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு 3.75 பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆண்டனி பிளிங்கன் தரப்பில், "போர் சூழலில் உக்ரைனுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்புத் துறையின் பங்குகளில் இருந்து 2.85 பில்லியன் டாலரையும், அந்த நாட்டு ராணுவத்தின் நவீனமயமாக்கலுக்கு ஆதரவாக 225 மில்லியன் டாலரையும் வழங்க உள்ளோம். அதேபோல, உக்ரைனுக்கு சாதகமாக உள்ள ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு வெளிநாட்டு ராணுவ நிதியுதவியில் 682 மில்லியன் டாலர் உதவியை வழங்க உள்ளோம். அந்த வகையில் மொத்தமாக 3.75 பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, உக்ரைன் நாட்டுக்கு ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை தொடர்ந்து வழங்கிவருகிறது. அண்மையில், 50 பிராட்லி காலாட்படை தாக்குதல் வாகனங்கள், 500 TOW ரக பீரங்கிகள், 100 M113 ரக வீரர்கள் கவச வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல வான்வழி தாக்குதல்களுக்கு ஜூனி ராக்கெட்டுகளுடன் கவச ராக்கெட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.