வாஷிங்டன் : இந்திய தூதரகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஜினா ரெய்மான்டோ கலந்து கொண்டு உரையாற்றினார். விழாவில் பேசிய அவர், ’இந்திய பிரதமர் மோடியுடன் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட தனக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்ததாகவும், அவர் யார் என்று அனைவருக்கும் தான் சொல்லி புரிய வைக்க வேணடிய அவசியம் இருக்காது என்றும்’ கூறினார்.
சில காரணங்களுக்காக உலகின் மிகப்பிரபலமான தலைவராக பிரதமர் மோடி கருதப்படுகிறார் என்றும்; அவர் நம்ப முடியாத தொலைநோக்கு சிந்தனை கொண்டவராக உள்ளார் என்றும் கூறினார். இந்திய மக்களுக்கான அவரது அர்ப்பணிப்பு நிலை விவரிக்க முடியாதது என்றும்; ஆழமான உணர்ச்சிவசமிக்கது என்றும்; உண்மையானது என்றும் தெரிவித்தார்.
மக்களை ஏழ்மை நிலையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றும்; உலக வல்லரசாக இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதே பிரதமர் மோடி விருப்பமாக கொண்டு உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். அவரது விருப்பம் உண்மையாகி உள்ளதாகவும்; நிகழ் காலத்தில் அது நடந்துகொண்டு இருப்பதை ஒவ்வொருவரும் காண்பதாகவும் அவர் கூறினார்.
ஆனால், இந்த சந்திப்பின் சிறந்த அம்சம் என்னவென்றால், பிரதமர் மோடியை அறிந்த அனைவருக்கும், அவர் ஒரு தொழில் நுட்ப வல்லுநர் என்பது தெரிந்து இருக்கும். அதேநேரம் அவர் கருத்தியல் விவரங்களில் ஆழமாக அறிவு கொண்டவர். ஒருமுறை அவருடன் ரேடியோ அலைவரிசைகள் மூலம் நெட்வொர்க் அணுகலை பெறுவது பற்றியும் செயற்கை நுண்ணறிவு குறித்தும் கலந்து உரையாடியபோது அவரது கருத்துகளைக் கேட்டு ஆச்சரியமடைந்தேன் என்றும் அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஜினா ரெய்மான்டோ தெரிவித்தார்.