துபாய்: ஈரானில் ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி கைது செய்யப்பட்ட இளம்பெண் மஹ்சா அமினி(22) உயிரிழந்ததையடுத்து, அரசிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. ஏராளமான பெண்கள் ஹிஜாப்பை எரித்தும் கூந்தலை வெட்டியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு, தடியடியில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது தேவையில்லாமல் தாக்குதல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என ஈரான் அரசுக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரானில் போராட்டங்களில் நடத்தப்படும் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் உயிரிழந்து வருவதை கவனித்து வருகிறோம். இளம்பெண் மஹ்சா அமினி மரணம் தொடர்பாக பாரபட்சமில்லா சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்.
கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் நடந்த சந்திப்பின்போது, மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தை அறிவுறுத்தினோம். தற்போது நாடு முழுவதும் பதற்றம் நிலவுவதால் போராட்டக்காரர்களுக்கு எதிராக தேவையற்ற நடவடிக்கைகள் எடுப்பதையும், படைகளை ஏவி தாக்குதல் நடத்துவதையும் ஈரான் அரசு தவிர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புவதை உறுதி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி!